தற்கொலை செய்து கொண்ட மாணவர் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி

by Editor / 13-09-2021 08:07:44pm
தற்கொலை செய்து கொண்ட மாணவர் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி

நாடு முழுவதும் நேற்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் இருந்து 1.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். முன்னதாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தனுஷ் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளிக்கேணி எம். எல். ஏ உதயநிதி ஸ்டாலின் மாணவர் தனிஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மகத்தான மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டது வேதனையளிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எந்தத் துயரம் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி வெற்றி பெற வேண்டும் என்கிற போராட்ட குணத்தை மாணவச் செல்வங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பெற்றோர்களுக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவச் செல்வங்கள் வழங்கி விடக் கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும் மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via