கோடநாடு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட  சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆஜர்

by Editor / 22-09-2021 03:39:29pm
கோடநாடு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட  சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆஜர்

 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான சந்தோஷ்சாமி மற்றும் 9-வது நபர் மனோஜ்சாமி ஆகியோர் எஸ்.பி. ஆஷிஸ் ராவத் முன்பு  விசாரணைக்கு ஆஜராகினர்.


நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், வழக்கின் 40-வது சாட்சியான உயிரிழந்த கனகராஜின் நண்பர் குழந்தைவேலு, சிவன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த திருமூர்த்தி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4-வது நபரான ஜம்சீர் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்டேட்டில் பணிபுரிந்து உயிரிழந்த தினேஷின் பெற்றோர் மற்றும் சகோதரியிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான சந்தோஷ்சாமி மற்றும் 9வது நபர் மனோஜ்சாமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக தனிப்படையினர் சம்மன் அனுப்பினர்.


அதன் பேரில்  சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ்சாமி ஆகியோர், தங்களது வழக்கறிஞர்கள் கே.விஜயன், முனிரத்னம் மற்றும் செந்திலுடன் விசாரணைக்காக உதகையில் உள்ள பழைய எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்தனர்.அவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், சுரேஷ், ஆய்வாளர் வேலுமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கில் சாட்சியான சுரேஷிடமும் விசாரணை நடந்து வருகிறது.


இதுகுறித்து சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ்சாமியின் வழக்கறிஞர் கே.விஜயன் கூறும்போது, ''சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ்சாமி ஆகிய இருவருக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது. வழக்கறிஞர்களுடன் அவர்கள் விசாரணைக்கு வந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. அடுத்து உள்ளவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும். விசாரிக்கப்படும் நபர் அச்சமின்றி, உண்மையைச் சொல்லக்கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும் என வலியறுத்தி இருந்தோம். காவல்துறையினர் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via