தசரா வேடப்பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

by Editor / 27-09-2021 07:56:05pm
தசரா வேடப்பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் தசரா வேடப்பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற நவம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வேடம் அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க குலசை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேடம் அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். தசரா பண்டிகை 10 திருநாளில் குலசை கடற்கரையில் நடைபெறும் அம்பாள் சூரம்ஹார நிகழ்ச்சிக்கு பின் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.


கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது 2ம் அலை பரவல் நீடிக்கும் நிலையில் வழிபாட்டுத்தலங்களில் திருவிழா நாட்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரில் வழிபட தடை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தசரா திருவிழாவிற்காக பக்தர்களுக்கான வேடப்பொருட்கள் வழக்கம் போல் நெல்லை கடைகளில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. நெல்லை டவுன் சுவாமி சன்னதியில் உள்ள தசரா வேடப்பொருட்கள் விற்பனை கடைகளில் விதவிதமான வேடப்பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காளி வேடத்திற்கான அலங்கார பொருட்களை பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மேலும் போலீஸ், டாக்டர், பிள்ளையார், முருகன், சிவன் உள்ளிட்ட கடவுள் உருவங்களின் வேடப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடைசி 10 நாட்கள் அதிகளவில் பக்தர்கள் விரதம் மேற்கொள்வார்கள் என்பதால் அடுத்த வாரம் விற்பனை மேலும் களைகட்டும்

 

Tags :

Share via