வடபழனி கோவிலில் பூஜை பொருட்கள்,  மாலைகள் விற்பனை செய்பவர்களுக்கு மாற்று இடம்  அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்தார் 

by Editor / 06-10-2021 04:05:45pm
வடபழனி கோவிலில் பூஜை பொருட்கள்,  மாலைகள் விற்பனை செய்பவர்களுக்கு மாற்று இடம்  அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்தார் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ) வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோவிலில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான அங்காடிகளுக்கு மாற்று இடம் வழங்கி கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திறந்து வைத்தார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான கடைகளை திறந்து வைத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் குடமுழுக்கு பணிகள் 2 வருடமாக நடைபெற்று வருகிறது. இதில் 34 திருப்பணி வேலைகள் ரூ. 2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோவிலுக்கு முன்பு உள்ள கூறைகள் அகற்றும் பணி  தொடங்கியுள்ளது.


திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடங்கள், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம், ரூபாய் 40 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேலும் கூடுதல் வசதிக்காக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு இடம் தனியாக கட்டப்படும்.


வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் நுழைவு வாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரம் இருந்தாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ.8 லட்சம் செலவில் தற்காலிகமாக பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான கடைகளை திறந்து வைத்துள்ளோம். இதனை தொடர்ந்து பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கடைகள் அகற்றப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கும் திருப்பணிகள் நடைபெற திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.


திருப்பணிகள் நடைபெற்று வரும் திருக்கோயில்களில் விரைவில் பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலை பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. பெரியாபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் ரூபாய் 125 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகமாக வரும் 553 திருக்கோயில்களை மேம்படுத்துவதற்கு வரைவு திட்டம் தயாரிக்கப்படும். சட்டபேரவையில் அறிவித்த 300 திருக்கோயில்களின் திருப்பணிகள் தொடங்கி அடுத்த மானிய கோரிக்கைக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via