குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா  கொடியேற்றம்: சூரசம்ஹாரம் காண தடை 

by Editor / 06-10-2021 06:23:21pm
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா  கொடியேற்றம்: சூரசம்ஹாரம் காண தடை 

தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா தடை காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது. தசரா பண்டிகையின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதால் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு அடுத்த படியாக இங்குதான் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இங்கு நடைபெறும் விழாவில் ஏராளமானோர் வேடமணிந்து பங்கேற்பார்கள்.இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கோவில் முன்பு இருக்கும் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு பல்வேறு அபிஷேகங்களுடன் திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக பக்தர்கள் பூசாரி கையினால் காப்பு என்ற மஞ்சள் கயிறை கட்டி பின்னர் வேடம் அணிவார்கள். இந்த ஆண்டு தசரா குழுக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் காப்புகள் வழங்கப்படுகிறது. விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்கள் ஊரிலேயே காப்பு கட்டிக் கொள்ள வேண்டும் என றிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கிராமங்களில் தசரா குடில் அமைத்து குலசை முத்தாரம்மன் படம் வைத்து தினசரி பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.


.குலசேகரன்பட்டினத்திற்கு முன்னதாகவே காவல்துறையினர் தடுப்பு கம்பிகள் அமைத்து யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கொடியேற்ற நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது என்றாலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் யூ-டியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே கண்டு களித்தனர்.


திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 15ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. வழக்கமாக கடற்கரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெற்றது. இந்த ஆண்டும் 2வது முறையாக கோவில் முன்பு நடைபெறுகிறது. இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனினும் இன்றைய கொடியேற்ற நிகழ்ச்சியை போன்று சூரசம்ஹாரம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சியும் பக்தர்கள் வசதிக்காக யூ-டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழக்கம் போல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்தவிதமான கலை நிகழ்ச்சிகள், தற்காலிக கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மேள தாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்கு வரக்கூடாது. தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனை பொருட்களை கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via