உச்சநீதிமன்றம் கண்டனத்தால் -  உத்தரப்பிரதேசம் விவசாயிகள்  கொலையில் 2 பேர் கைது

by Editor / 07-10-2021 05:22:13pm
  உச்சநீதிமன்றம் கண்டனத்தால் -  உத்தரப்பிரதேசம் விவசாயிகள்  கொலையில் 2 பேர் கைது


உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மகனின் ஆதரவாளர்கள் 2 பேரை அம்மாநில காவல்துறை. கைது செய்துள்ளது. 


உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்டனர். மத்திய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் மகன் தான் காரை ஏற்றிக் கொன்றதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. 


இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் எத்தனை பேர் கைது செய்யபட்டுள்ளனர், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிமன்றம் உத்தரபிரதேச காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது. இதன் எதிரொலியாக லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று வரை வெறும் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்ற அழுத்தத்திற்கு பிறகு, தற்போது விவசாயிகள் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை காவல்துறை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via