இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு  வெள்ளித்தேர் செய்ய 32 கிலோ வெள்ளி

by Editor / 12-10-2021 04:43:15pm
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு  வெள்ளித்தேர் செய்ய 32 கிலோ வெள்ளி



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வெள்ளித் தேர் செய்வதற்கு 32 கிலோ வெள்ளி நன்கொடையாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.


கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி திருக்கோவிலுக்கு வெள்ளித்தேர் செய்வதற்காக 32 கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 2 லட்சம் பணம் நன்கொடையாக விருதுநகர், ராஜபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.சக்திவேல் ராஜா என்பவர் அளித்துள்ளார்.


அதை பெற்று கொண்ட அமைச்சர் பேசும்போது கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறையில் புதியதாக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் வசதிக்காக ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் 13 ஆயிரம் கோயில் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. கொளத்தூர், விளாத்திக்குளம், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம் ஆகிய நான்கு நகரங்களில் புதியதாக கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் - ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் நிறைவேற்றப்பபட்டுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை துவங்கப்பட்டு போற்றி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது.


திருக்கோவில் பணிகளுக்கு நன்கொடைகள் மற்றும் பொருட்கள் வழங்க இணையதளம் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளித் தேர் செய்ய 32 கிலோ வெள்ளி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. வெள்ளித்தேர் பணிகள் விரைவில் துவங்கப்படும். இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபடும் பக்தர்களை பாராட்டுகின்றோம். இனி வருங்காலங்களில் கோவில் களின் அடிப்படை வசதிகள் மற்றும் திருப்பணிகளுக்கு பக்தர்களின் நன்கொடைகள் வரவேற்றப்படு கின்றன. இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

 

Tags :

Share via