கேரளா சென்ற சுவாமி சிலைகள் குமரி திரும்பின:

by Editor / 18-10-2021 05:58:43pm
கேரளா சென்ற சுவாமி சிலைகள் குமரி திரும்பின:


நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டுசெல்லப்பட்ட சுவாமி விக்ரகங்கள் கன்னியாகுமரி திரும்பின. கேரள எல்லையான களியக்காவிளையை வந்தடைந்தபோது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.


திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தின்போது பத்மநாபபுரம் அரண்மனையில் விமரிசையாக நடைபெற்று வந்த நவராத்திரி திருவிழா, தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் விழாவும் அங்கேயே நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபரம் அரண்மனையில் இருந்து பாரம்பரிய முறைப்படி தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய சுவாமி விக்ரகங்கள், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் ஏந்திய அணிவகுப்புடன் திருவனந்தபுரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, நவராத்திரி பூஜையில் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவுக்காகக் கடந்த 3-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சுவாமி விக்ரகங்கள் தனிமனித இடைவெளியுடன் பல்லக்கில் கொண்டுசெல்லப்பட்டன.அங்கு 6-ம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவில் வைக்கப்பட்ட சுவாமி விக்ரகங்கள் விழா முடிந்த பின்பு  மீண்டும் கன்னியாகுமரிக்குத் திரும்பின.

இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் தங்கவைக்கப்பட்டு பின்னர்  குமரி நோக்கி பவனியாகக் கொண்டுவரப்பட்டது.


கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையை வந்தடைந்தபோது, உடைவாளைப் பின்தொடர்ந்த தேவாரக்கட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய விக்ரகங்களின் ஊர்வலப் பொறுப்பை கேரள மாநிலச் சிறப்புக் காவல் பிரிவு ஆய்வாளர் அனில்குமார், குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை கண்காணிப்பாளர்கள் ஆனந்த், சிவகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.


அப்போது, பாரம்பரிய முறைப்படி போலீஸார் வாள் ஏந்தியும், பேண்டு வாத்தியம் இசைத்தும் வரவேற்பு அளித்தனர். இரவில் குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கும் சுவாமி விக்ரகங்கள், நாளை பத்மநாபபுரம் அரண்மனையை அடைகின்றன. பின்னர் அந்தந்தக் கோயில்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

 

Tags :

Share via