8 மாவட்டங்களில் கனமழை

by Editor / 24-10-2021 07:59:00pm
8 மாவட்டங்களில் கனமழை

மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட கடலோர தமிழ்நாட்டில்‌ (1.5 கிலோ மீட்டர்‌ உயரம் வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவேலூர்‌, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

25 ந்தேதி (நாளை) புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, விருதுநகர்‌, மதுரை, திருச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26 ந்தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதிவான மழை அளவு விவரம் வருமாறு:

ஏற்காடு 10 செ.மீ., திருமூர்த்தி அணை 9 செ.மீ., பந்தலூர்‌ 8 செ.மீ., பெரியார்‌, சின்னக்கல்லார்‌, கலசப்பாக்கம்‌ தலா 7 செ.மீ., திருவண்ணாமலை, அமராவதி அணை தலா 6 செ.மீ., தாராபுரம்‌ கீழ்பென்னாத்தூர்‌, கொடைக்கானல்‌, ஸ்ரீவில்லிபுத்தூர்‌, ராமநாதபுரம்‌, மலையூர்‌, ஹாரிசன்‌ எஸ்டேட்‌ தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில்‌ அடுத்த 48 மணி நேரத்தில்‌ துவங்குவதற்கான சாதகமான சூழல்‌ நிலவுகிறது. தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via