பேருந்துகளில் சாதி, பாடல்களை ஒலிபரப்பக் கூடாது-திருநெல்வேலி காவல் துறை

by Editor / 24-10-2021 08:04:33pm
பேருந்துகளில் சாதி, பாடல்களை ஒலிபரப்பக் கூடாது-திருநெல்வேலி காவல் துறை

திருநெல்வேலியில் தனியார் பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக கிராமப்புறங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் திரையரங்குகள் போன்று சவுண்ட் சிஸ்டம், ஸ்பீக்கர் ஆகியவை பொருத்தப்பட்டு காதை கிழிக்கும் அளவுக்கு சினிமா பாடல்கள் ஒலிக்கப்படும். மாணவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் இதற்காகவே தனியார் பேருந்துகளில் பயணிப்பார்கள்.

மற்றொரு பக்கம் நெல்லை, கோபாலசமுத்திரம் பகுதியில் சாதி ரீதியாக ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த மாதம் அடுத்தடுத்து இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறியது. நெல்லையில் பள்ளி, கல்லூரி என சாதி மோதல் பிரச்சனை விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், சாதி பாகுபாட்டை தூண்டும் வேரை அறுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது திருநெல்வேலி காவல்துறை.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சாதி ரீதியாக நடந்த கொலை சம்பவங்களைத் தொடர்ந்து, ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு இடையே சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும் அனைத்துத் தனியார் பேருந்துகளிலும் சாதி, மத ரீதியான பாடல்கள், வசனங்கள் ஒலிப்பரப்புவதை தவிர்க்குமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறி செயல்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via