கலந்தாய்வு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில் 95 ஆயிரம் இடங்கள் நிரம்பின

by Editor / 25-10-2021 04:29:41pm
கலந்தாய்வு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில்  95 ஆயிரம் இடங்கள் நிரம்பின


என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் 95 ஆயிரத்து 69 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருக்கும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்தது.
சிறப்பு பிரிவு கலந்தாய்வு முடிவில் 473 பேர் இடங்களை தேர்வு செய்தனர். இதேபோல், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்ட நிலையில், அதன் மூலம் 7 ஆயிரத்து 876 மாணவ-வர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.


பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி முதல் ஆரம்பித்து, 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அந்தவகையில் முதல் சுற்றில் 11 ஆயிரத்து 185 இடங்களும், 2-வது சுற்றில் 20 ஆயிரத்து 363 இடங்களும், 3-வது சுற்றில் 23 ஆயிரத்து 327 இடங்களும், 4-வது சுற்றில் 26 ஆயிரத்து 515 இடங்களும் நிரம்பின. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வில் 89 ஆயிரத்து 187 இடங்களை நிரம்பின.


துணை கலந்தாய்வு அறிவிக்கப்பட்ட தொடங்கிய நிலையில், அந்த கலந்தாய்வும் நிறைவு பெற்று இருக்கிறது. இதில் 11 ஆயிரத்து 827 மாணவ-ர்கள் இந்த கலந்தாய்வுக்கு தகுதி பெற்று இருந்த நிலையில், இறுதியாக 5 ஆயிரத்து 882 இடங்களை தான் மாணவ-ர்கள் தேர்வு செய்தனர்.


இதன்படி பார்க்கையில், 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருக்கும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு, துணை கலந்தாய்வுகள் மூலம் 95 ஆயிரத்து 69 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.


கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிச மாக குறைந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து இருக்கிறது. அதிலும் கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது.


தற்போது முதல்கட்ட கலந்தாய்வு, துணை கலந்தாய்வு நடந்து முடிந்து இருக்கிறது. எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்கு அடுத்தகட்டமாக கலந்தாய்வு நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அதற்கான அறிவிப்பு வெளியாகுமா? என்பது குறித்து விரைவில் தெரியவரும். பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், அடுத்ததாக பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வு 27-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via