கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு- விசாரணை தீவிரம்.

by Editor / 09-12-2021 12:17:07pm
கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு- விசாரணை தீவிரம்.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

 மரத்தில் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மீட்க ஓடி வந்துள்ளனர். 

ஆனால் ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்த  சத்தம் வந்ததால் வெடி பொருட்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அதன் அருகே செல்ல பயந்து உடனடியாக தீயணைப்புதுறை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர்.

முப்படை தளபதி சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உடனடியாக விமானப்படை அதிகாரிகளும் சம்பவம் நடந்த காட்டேரி பகுதிக்கு விரைந்தனர். 

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? பனி மூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது ஹெலிகாப்டரில் ஏதாவது கோளாறு இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களிடமும் உள்ளூர் போலீசார் உதவியுடன் விமானப்படையினர் விசாரித்தனர்.

விபத்துக்குள்ளான எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு ஹெலிகாப்டர் ஆகும். ஏனென்றால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் பாதுகாப்பானது என்பதால் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் தாங்கள் செல்வதற்கு இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

பொதுவாகவே இந்த ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு முன்பு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி புறப்பட்ட இந்த எம்.ஐ.17 வி.5 ரக ஹெலிகாப்டரும் பரிசோதிக்கப்பட்டது.

அதன்பின்னரே முப்படை தளபதி உள்பட 14 பேர் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். பலமுறை பரிசோதிக்கப்பட்டும் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.

இதற்கிடையே ஹெலிகாப்டரில் என்ன நடந்தது என தெரிய வேண்டும் என்றால் அதில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே தெரியவரும். அதனால் அந்த கருப்பு பெட்டியை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை கொண்டு விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via