கொழும்பு டூ காங்கேசன்துறை இந்தியாவின் நிதி உதவியுடன் ... இலங்கையில் புதிய ரயில் சேவை
இந்தியாவின் நிதி பங்களிப்புடன் இலங்கையில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் இந்தியாவின் பங்களிப்புடன் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ரயில் சேவைக்காகவும், கொரோனா பேரிடரை கையாளுவதற்கு உதவி வருவதற்காகவும், இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு நன்றி கூறியுள்ளார். ரயிலின் இஞ்சினில் இந்தியா மற்றும் இலங்கை கொடிகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன.
இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து, தமிழர்கள் மிகுதியாக வசிக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியான ஜாஃப்னாவின் காங்கேசன்துறைக்கும் இடையே புதிதாக ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள டீசல் ரயில் இஞ்சின் மற்றும் ரயில் பெட்டிகள் அனைத்தும் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டவை.
புதிய ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்திய தூதரகத்தின் இணை தூதர் வினோத் கே.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அந்த ரயிலில் அவர்கள் பயணித்தனர்.இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக இந்த சேவை விளங்குவதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Tags :