50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் விசைத்தறிகள் இயங்கியது

by Admin / 02-03-2022 11:49:39am
50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் விசைத்தறிகள் இயங்கியது

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன இவற்றில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி வந்தனர். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கூலி உயர்வு வழங்கவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிய கூலி உயர்வு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கூலி உயர்வு வழங்கவில்லை.

இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி 9-ந் தேதி முதல் கூலி உயர்வு மற்றும், சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், பல்லடம் ரசகத்திற்கும் 20 சதவீதமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம், குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம், இவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு என போராட்டம் வலுத்தது. அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடனான பேச்சுவார்த்தை கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் 2 கட்டமாக நடந்தது.

நேற்று நடந்த பேச்சு வார்த்தையில், சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதமும், இதர ரகத்திற்கு 15 சதவீதம் வழங்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்தனர்.

50 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் விசைத்தறிகள் இயங்க தொடங்கியது.

கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம்பட்டி, பதுவம் பள்ளி, கிட்டாம் பாளையம், தொட்டிபாளையம், சூலூர், பருவாய் பகுதிகளில் உள்ள விசைத்தறிகள், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் இதர பகுதிகளில் என மொத்தமுள்ள 2 லட்சம் விசைத்தறிகளிலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 

உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு விசைத்தறிகள் இயங்க தொடங்கியதாலும், தாங்கள் கேட்ட கூலி உயர்வு கிடைத்ததாலும் விசைத்தறி உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்கள்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத் தறிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வந்தனர். வேலை நிறுத்தம் காரணமாக இவர்கள் அனைவரும் ஊருக்கு சென்றிருந்தனர்.

தற்போது வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து பணிகள் தொடங்கியுள்ளதால் அவர்களை விசைத்தறியாளர்கள் தொடர்பு கொண்டு அழைத்து வருகின்றனர்.

இதையடுத்து அவர்களும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு பணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

முன்னதாக விசைத்தறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டருடன் நடந்த பேச்சு வார்த்தையில் கூறப்பட்ட அனைத்து தகவல்களும், சங்கத்தில் உள்ள அனைவரிடத்திலும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via