பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

by Editor / 06-03-2022 11:39:38pm
 பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடந்த ‘இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார். அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.37 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் வர மறுத்துவிட்டார்.

இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் நடிகை மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து சோனாக்‌ஷி சின்ஹா உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து சோனாக்‌ஷி சின்ஹா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், கைதுக்கு இடைக்கால தடை விதித்தது. போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை சோனாக்‌ஷி சின்ஹா கைது செய்யப்பட மாட்டார் என்றும் விசாரணைக்கு சோனாக்‌ஷி ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்நிலையில் நேற்று சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக மொராதாபாத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக மனுதாரர் பிரமோத் சர்மாவின் மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத சோனாக்ஷி சின்ஹா ​​மற்றும் அவரது ஆலோசகர் அபிஷேக் சின்ஹா ​​ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

கைதுக்கு விதிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காலம் முடிந்துவிட்ட நிலையில், விசாரணை நீதிமன்றம் தற்போது சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு வரும் ஏப்ரல் 25ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags : An Uttar Pradesh court has issued a warrant against Bollywood actress Sonakshi Sinha

Share via