ஜி.எஸ்.டி. வரி 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர வாய்ப்பு

by Admin / 07-03-2022 04:44:37pm
ஜி.எஸ்.டி. வரி 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர வாய்ப்பு

நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்வதற்காக 2022-ம் ஆண்டு வரை இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய 4 வகைகளில் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த பட்சமாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஆடம்பர பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

மேலும் அந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது.

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாகவே இருப்பதாக மாநில அரசுகள் தெரிவித்து வந்தன.

எனவே ஜி.எஸ்.டி. மூலமாக வரி வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக கர்நாடக முதல்-மந்திரியும், அம்மாநில நிதி மந்திரியுமான பசவராஜ் பொம்மை தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரியின் குறைந்தபட்ச வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்த அந்த குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 5, 12, 18, 28 சதவீதம் என இருக்கும் ஜி.எஸ்.டி. வரம்பை 8, 18, 28 சதவீதம் என 3 வகைகளாக மாற்றவும் அந்த குழு பரிந் துரைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எஸ்.டி. குறைந்த பட்ச வரம்பை 1 சதவீதம் அதிகரிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது. குறைந்தபட்ச வரி வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டால் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1½ லட்சம் கோடி வருமானம் கிடைக்கும்.

தற்போது 12 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்கள் 18 சதவீத வரம்புக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைக்க இருக்கிறது. மாநில நிதி மந்திரிகள் குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதியில் ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்ய உள்ளது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

 

Tags :

Share via