பாவத்திலிருந்து விமோசனம் வேண்டுமா?

by Admin / 24-07-2021 06:06:51pm
பாவத்திலிருந்து விமோசனம் வேண்டுமா?

 

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதே நேரம் சிவபுண்ணியமானது செய்யும் பாவங்கள் அனைத்திலிருந்தும் நம்மை நீக்கிவிடும். அதை விளக்கும் ஒரு சம்பவம் இது.


விராலி தேசத்தில் சோம்பேறி ஒருவன் இருந்தான். எந்த வேலையும் செய்யாமல்  கிடைத்ததையோ அல்லது   களவாடி விற்றோ வாழ்ந்துவந்தான். ஒரு முறை பக்கத்து ஊரில் நடந்த திருவிழா ஒன்றுக்கு சென்றான். அங்கு மக்களிடமிருந்து  இயன்றவரை பொருள்களை கொள்ளையடித்தான். இன்று எவ்வளவு பொருள்கள் கிடைத்திருக்கிறதே. இனி  சிறிது காலத்துக்கு நமக்கு பஞ்சமில்லை என்று மகிழ்ந்தபடி அனைத்து பொருள்களையும் மூட்டை கட்டினான்.  இந்த ஊரில் பொருள்களை விற்றால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் இரண்டு கிராமங் கள் தள்ளி சென்று விற்பனை செய்யலாம் என்றபடி மூட்டையைத் தூக்கிக் கொண்டு பொடி நடையாக நடந்தான்.


ஒரு கிராமத்தைக் கடந்தவனால் மேலும் பொருள்களை சுமந்துகொண்டு செல்ல முடியவில்லை. அதனால்  அருகில் ஏதாவது  இடம் இருக்கிறதா.. புதர் போன்று இடம் அமைந்திருக்கிறதா என்றெல்லாம் சுற்றும் முற்றும் பார்த்தான்.  நேரம் செல்ல இடம் ஏதும் அவனுக்கு ஏற்றாற் போல் கிடைக்கவில்லை.  இரவு நேரம் நெருங்கியது.  சிவாலய கோபுரம் ஒன்று தெரிந்தது. அதை நோக்கி சென் றான்.  கோயில் எதிரில் இருந்த  குளத்தில் புதர் போன்று செடிகள் வளர்ந்திருந் தது. கையில் இருந்த மூட்டையை  அதில் போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மூட்டையை எடுக்க அந்த இடத்துக்கு வந்தான். அவனால் பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை. 


கோடாரி, கத்தியோடு அங்கிருந்த செடிகளையெல்லாம் வெட்டி வீழ்த்தி சுத்தம் செய்தான். ஒரு வாரம் வரை அவனுக்கு குளத்தில் இருந்த செடி, மரங்களை  அகற்றவே சரியாக இருந்தது. அதற்குள்  பொருளும் மண்ணுக்குள் புதைந்து விட்டது. மீண்டும் மண்களையெல்லாம் தனியாளாக  தூர்வாரி சுத்தம் செய்தான். அவனுடைய பொருள் கிடைத்ததும் கொண்டு சென்று விற்று சந்தோஷமாக வாழ்ந்தான்.  அவனுடைய இறுதிக்காலம்  முடிந்தது. சிவகணங்கள் தேரோடு வந்து அவனை கயிலாயத்துக்கு அழைத்துச்சென்றது.அங்கு அவனுக்கு நல்ல உணவுகள் தந்து உபசரித்தார்கள். பூலோகத்தில் எவ்வளோ கெடுதல் செய்திருக் கிறோம்.  பொருள்களை களவாடி விற்றிருக்கிறோம் நமக்கு போய் இவ்வளவு மரியாதையா என்றவன் அங்கிருந்த சிவகணங்களிடம் கேட்டான்.


நீ பொருள்களை களவாடி அநியாயம் செய்தது உண்மைதான். ஆனால் சிவாலய த்தின் அருகில் உள்ள குளத்தைத் தூய்மையாக்கியிருக்கிறாய். இன்று வருண பகவானின் அருளால் குளம் நிறைந்திருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மகிழ்ச்சி யடைந்திருக்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சியால் சிவப்பெருமானும் உன்மீது அருள் புரிந்திருக்கிறார். அறிந்தோ அறியாமலோ நீ செய்த இந்த செயல் உன்னை பாவத்திலிருந்து போக்கி புண்ணியத்தைக் கொடுத்திருக்கிறது என்றார்கள்.

 

Tags :

Share via