அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

by Admin / 22-03-2022 05:10:14pm
அகதிகளாக தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகியுள்ளது. 

இதையடுத்து தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு நபர்கள் நிற்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கியூ பிராஞ்ச் போலீஸார், இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்தில் ஆகிய பகுதிகளில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆறு நபர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய பின்னர் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து அகதிகளாக அதிகமான அளவில் தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை கியூ பிரிவு மரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via