சிபிஎஸ்சி 10ம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுக்கான  மாதிரி வினாத் தாள் வெளியாகியுள்ளது.

by Editor / 11-04-2022 10:09:29am
சிபிஎஸ்சி 10ம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுக்கான  மாதிரி வினாத் தாள் வெளியாகியுள்ளது.

2022 கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. முதல் அமர்வு, கடந்தாண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் கிடைக்க வேண்டியும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும் மாதிரி வினாத் தாளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், cbseacademic.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,

மேலும், கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு வினா வங்கியையும் (Question Bank) கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள், இதனை பதிவிறக்கம் செய்து பலனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் உள்ளன.

முதல் அமர்வில் வெறும் கொள்குறிவகை வினா விடையாக  (MCQ) இருந்த நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும்.

மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஜூலை மாதம் நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) முடிவு செய்தது.  மீண்டும் அத்தகைய  எதிர்பாராத சூழல்  ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்தது. அதனையடுத்து, முதல் அமர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல் அமர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த புதிய நடைமுறையின் படி, ஒவ்வொரு அமர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கொரோனா பெருந்தொற்று (அல்லது) இன்ன பிற காரணங்களினால் ஏதேனும் ஒரு அமர்வை நடத்த முடியாவிட்டால், மற்றொரு அமர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via