தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 16-05-2022 08:46:58am
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மே 16-ம்தேதி (இன்று) முதல் வரும் 19-ம் தேதிவரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மே 16-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி, விருதுநகர், சேலம், ஈரோடுமாவட்டங்களிலும், 17-ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். வரும் 18-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், வரும் 19-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மே 17-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில்மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும். எனவே,இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 4 days of heavy rain in Tamil Nadu: Meteorological Department information

Share via