பருப்பு, பாமாயில் டெண்டருக்கு  இடைக்கால தடை   மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 

by Editor / 26-05-2021 04:44:19pm
பருப்பு, பாமாயில் டெண்டருக்கு  இடைக்கால தடை   மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு 



பொது விநியோக திட்டத்திற்காக 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிளையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் சார்பாக 2 கோடி குடும்ப அட்டைதாரருக்கு பருப்பு, பாமாயில், சீனி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக வழங்கப்படக்கூடிய அத்தியாவசிய பொருட்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள திறன், உள்கட்டமைப்பு, அனுபவம், ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளன. இதன்படி 2021-ம் பிப்ரவரி 25-ம் தேதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இயக்குனர் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள முந்தைய நிபந்தனைகள்படி கலந்துகொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிபந்தனை என்பது, கடைசி 3 ஆண்டு வருமானம் ரூ.71 கோடியாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள நிபந்தனைப்படி ரூ.11 கோடி ஆண்டு வருமானம் இருந்தால் போதும் என உள்ளது. மேலும், டெண்டர் அறிவிப்பின் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை.
எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக, பொது விநியோக திட்டத்திற்காக 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு  விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக, பொது விநியோக திட்டத்திற்காக 20,000 டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயில் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via