சூடுபிடித்த போதைக் காளான் விற்பனை

by Editor / 28-06-2022 02:35:59pm
 சூடுபிடித்த போதைக் காளான் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அரிய வகை செடிகள் மரங்கள் உள்ள நிலையில் சைலோ சைபின் என்ற போதை தரும் ரசாயனம் கொண்ட காளான்களும் வளர்ந்து கிடக்கின்றன.உடலுக்கு நலம் தரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் இருந்தாலும் இந்த போதைக் காளானுக்கு இருக்கும் மவுசே தனியாகத்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த காளான் விற்பனை சக்கை போடு போட்ட நிலையில், காவல்துறை நடவடிக்கையால்  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இந்தநிலையில் தற்போது மீண்டும் போதைக் காளான் விற்பனை சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் வெளி மாநில இளைஞர்களை குறிவைத்து  நூதன முறையில் விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.இணையதளம் மூலம் பகிரப்படும் செல்போன் எண்களில் வெளி நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்குப் போதை காளான் கிடைத்து வருகிறது. போதைக் காளான் விற்பனையே சட்ட விரோதம் என்னும் நிலையில் போலி காளானை கொடுத்து ஏமாற்றும் மோசடியும் நடைபெற்று வருகிறது.கைது செய்யப்படுபவர்கள் மீது கஞ்சா வழக்கே பதிவு செய்யப்படுவதால் தண்டனை குறைவாகவே கிடைக்கும் நிலை உள்ளது. அதனால் போதைக் காளானுக்கென்று அதிக தண்டனை அளிக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via