தனியார் பள்ளி மாணவி தற்கொலை அமைச்சர் ஆறுதல்.

by Editor / 16-07-2022 04:04:53pm
தனியார் பள்ளி  மாணவி தற்கொலை அமைச்சர் ஆறுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3 மாடிகள் கொண்ட ஒருகட்டிடத்தில், முதல் 2-தளங்கள் வகுப்பறைகளாகவும், 3-வது மாடி பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும் விடுதியாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17) என்பவர் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.  மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியில் மொத்தம் 26 மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த 11 ஆம் தேதி பள்ளி முடிந்த பின்னர் ஸ்ரீமதி வழக்கம் போல் விடுதியில் இருந்தார். இரவில் சக மாணவிகளுடன் சாப்பிட்ட அவர், பின்னர் அவரது அறையில் தூங்கினார். இந்த நிலையில், 12ஆம் தேதி அதிகாலை பள்ளி காவலாளி ஒருவர், வளாகத்தில் கண்காணிப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவி ஸ்ரீமதி கீழே விழுந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த காவலாளி பள்ளி நிர்வாகத்திற்கும், போலீசுக்கும் இது பற்றி தகவல் தெரிவித்தார்.பள்ளி நிர்வாகத்தினரும்,மற்றும் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மாணவி ஸ்ரீமதி இறந்து கிடந்தார். இதன் மூலம் அவர் விடுதி அமைந்துள்ள 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் 12ஆம் தேதி காலையில் மாணவியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது தாய் செல்வி (40) பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்துள்ளார். அங்கு பிணமாக கிடந்த மகளை பார்த்து அவர் கதறி அழுதார். மேலும் தனது மகளின்  சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுடன் பள்ளியில் மாணவி விழுந்து கிடந்த இடத்தை பார்க்க சென்றார். 

 இதன் பின்னர், செல்வி தனது உறவினர்களுடன் பள்ளி முன்பு சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் தலைமையில் டி.எஸ்.பி.ராஜலட்சுமி, மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் தாய் செல்வி கூறுகையில், தனது மகள் 3-வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் விழுந்து கிடந்த இடத்தில் ரத்த கறைகள் பெரிய அளவில் இல்லை. அதோடு அவரது உடலிலும் காயங்கள் அதிகமாக காணப்படாத நிலையில், மார்பு பகுதியில் கீறல்கள் இருக்கின்றன. இதன் மூலம் எனது மகளின் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தார்.இது தொடர்பாக எழுத்து பூர்வமாக புகார் கொடுங்கள், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

 தொடர்ந்து செல்வி, சின்னசேலம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த மாணவி, மாடியில் இருந்து குதித்தபோது அந்த பகுதியில் உள்ள மரக்கிளைகள் மூலம் அந்த கீறல்கள் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. என்று பள்ளி தரப்பில் தெரிவித்தனர் அதே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியிடம் இருந்து ஒரு கடிதம் சிக்கி உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த கடிதத்தில் இருந்த விவரம் குறித்து போலீஸ் தரப்பில் எதுவும் வெளியிடப்படவில்லை. 

 இந்த நிலையில் பெரியநெசலூர் கிராமத்தில் இறந்த பள்ளி மாணவி ஶ்ரீமதி இல்லத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மாணவியின் தாய் செல்வி நேரில் சந்தித்து ஆறுதலை தெரிவித்து வருகிறார். மாணவியின் தாயிடம் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி அவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags : Private school girl commits suicide, Minister consoles.

Share via