குபேரன் பிரதிஷ்டை செய்த பழைய சொக்க நாதர் கோயில்!

by Editor / 02-06-2021 08:42:41am
 குபேரன் பிரதிஷ்டை செய்த பழைய சொக்க நாதர் கோயில்!

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

சிவ லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் ஆரம்ப காலத்திலிருந்து இந்த தலம் புதன் ஷேத்திரமாக விளங்குகிறது.

பணம். இதற்கு அதிபதி குபேரன். இந்த குபேரனே தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருகச் சொக்கநாதரை வழிபட்டு, பிரதிஷ்டை செய்த கோயில் ஆதிசொக்கநாதர் கோயில்.

சிவன் லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மதுரையை குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தார்..

மன்னன் கல்வியில் மிகச் சிறந்தவன் என்பதைக் கேள்விப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்குச் சென்று தான் கொண்டு வந்த பாடலால் மன்னனைப் புகழ்ந்து பாடினார்.

இவரது பாடலால் பொறாமைப்பட்ட பாண்டிய மன்னன் சரியாக உபசரிக்காமல் இருந்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடர், அங்குள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, ''இறைவா! பாண்டிய மன்னன் தமிழ் புலமை வாய்ந்தவன் என்று நினைத்து அவனைப் பாடினேன். ஆனால், அவனோ பொறாமையால் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானோ என்பது எனக்குத் தெரியாது,' என்று சிவனிடம் விண்ணப்பம் செய்து தணியாத கோபத்துடன் வடதிசை நோக்கிச் சென்றார்.

இதைக் கேட்ட சிவன், தன்னுடைய லிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் கோயிலுக்கு நேர் வடக்கே, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோயிலில் எழுந்தருளியதுடன், இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து மன்னனுக்கு பாடம் புகட்டுவதாகக் கூறினார்.

திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் இறைவனைத் தரிசிக்க வந்த பக்தர்கள் அங்குச் சிவலிங்கத்தைக் காணாமல் அதிர்ச்சியடைந்து, இந்த விஷயத்தைப் பாண்டிய மன்னனிடம் தெரிவிக்க வந்தார்கள்.

அப்போது நகரமே பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள். பதட்டத்துடன் மன்னனிடம் சென்று, ''மன்னா! கோயிலில் இறைவனைக் காணோம், நகரமும் பொலிவிழுந்து கிடக்கிறது,' என்று தெரிவித்தார்கள்.

நடந்ததைக் கேள்விப்பட்ட மன்னன், மிகவும் வருத்தத்துடன், ''இறைவா! நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமா தேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?' என்று இறைவனிடம் கெஞ்சி மன்றாடினான்.

அப்போது மன்னன் இடைக்காடரை அவமதித்ததால் தான் சிவன் அங்கிருந்து சென்றதாக அசரீரி கூறியது. சிலர் ஓடி வந்து, வைகை ஆற்றுக்குத் தென்கரையில் உள்ள கோயிலில் உமாதேவியுடன் சொக்கநாதர் எழுந்தருளியிருக்கும் விஷயத்தை மன்னனிடம் தெரிவித்தனர்.

உடனே, மன்னன் அந்த இடத்திற்குச் சென்று, ''சொக்கா!, தாங்கள் அங்கிருந்து இங்க வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் தவறு ஏதும் செய்தேனா? அல்லது வேறு யாரேனும் தவறு செய்து விட்டார்களா?' என கேட்டு மன்றாடி, இறைவனைப் போற்றி துதி பாடினான்.

மன்னனின் துதியால் மகிழ்ந்த சொக்கன், ''பாண்டியனே!, எல்லாத் தலங்களிலும் இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் யாம் இருக்கும் லிங்கங்களிலேயே, எனது தோழன் குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் உத்தரவாலவாய் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இந்த கோயிலுக்கு ஆதிசொக்கநாதர் கோயில் என்றும், பழைய சொக்க நாதர் கோயில் என்றும், வடதிருவாலவாய் என்றும் பெயருண்டு.

 

Tags :

Share via