மதுரை - காசி உலா ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

by Editor / 23-07-2022 02:40:06pm
மதுரை - காசி உலா ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை காசி இடையே உலா ரயில் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து இன்று மதியம் 12:15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலை டெல்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் சென்னை எழும்பூர் விஜயவாடா வழியாக காசி சென்று அடையும். ஏழு சக்தி பீடங்கள் பாத கயா, நாபி கயா மற்றும் ஆடி அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை, பூரி ஜெகன்நாதர் கோயில், கொனார்க் சூரியக் கோயில், கல்கத்தா உள்ளூர் சுற்றுலா, காசி விசுவநாதர், அன்னபூரணி தரிசனம், பின்பு விஜயவாடா கனகதுர்கா தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடைகிறது. சுற்றுலா செல்லும் மொத்த தூரம் 5548 கிலோமீட்டர் ஆகும். குறைந்த கட்டண பிரிவில் கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3.88 கட்டணமாக அமைந்துள்ளது. இந்த 12 நாள் சுற்றுலாவில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1792 கட்டணமாக அமைந்துள்ளது. 560 பயணிகள் பயணம் செய்யும் இந்த சுற்றுலா ரயிலில் இதுவரை 85 சதவீதமாக 470 பேர் பதிவு செய்துள்ளார்கள். மதுரையில் இருந்து 170 பேர் பயணம் செய்கின்றனர். மற்றவர்கள் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் இணைந்து கொள்வார்கள். இந்த ரயிலில் உள்ள சமையல் பெட்டிகளில் எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் நவீன மின்சார அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலா முடிந்து இந்த ரயில் ஆகஸ்டு மூன்றாம் தேதி அதிகாலை 05.45 மணிக்கு மதுரை வந்து சேருகிறது. மதுரையில் நடந்த விழாவில் தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் செந்தில்குமார், முதன்மை ரயில் இயக்க மேலாளர் சிவக்குமார், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், மதுரை கோட்ட அதிகாரிகள் ரதிப் பிரியா, ராம் பிரசாத், ரவிக்குமாரன் நாயர், ராஜேஷ் சந்திரன், சதீஷ் சரவணன், இசைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 அடுத்த சுற்றுலா ரயில் ஆகஸ்ட் 23 அன்று மதுரையில் இருந்து ஷீரடி, சனி சிக்னாபூர், த்ரயம்பகேஷ்வர், பஞ்சவடி, பண்டரிபூர், மந்திராலயம் ஆகிய ஆன்மீக தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா உலா ரயில் இயக்கப்பட இருக்கிறது. செப்டம்பர் 2 அன்று மதுரையிலிருந்து கோவா, மும்பை, அமிர்தசரஸ் பொற்கோயில், ஜெய்ப்பூர், அஜ்மீர் ஆகிய சுற்றுலா தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா ரயிலும் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களுக்கு பயண சீட்டு பதிவு செய்ய www.ularail.com என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மதுரை - காசி உலா ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
 

Tags :

Share via