18-ஆவது பிறந்த நாள் பரிசாக வாக்காளா் அடையாள அட்டை

by Editor / 28-08-2022 06:59:21pm
 18-ஆவது பிறந்த நாள் பரிசாக வாக்காளா் அடையாள அட்டை

17 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொண்டால், அவா்களின் 18-ஆவது பிறந்த நாளில் வாக்காளா் அடையாள அட்டை பரிசாக வீட்டுக்கு அனுப்பப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று, வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:-

இளைஞா்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் மக்கள் 16 சதவீதம் மட்டுமே கல்வி அறிவு பெற்றவா்களாக இருந்த காலத்தில் வாக்காளா்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளா்க்கப்பட்டது.

 தற்போது, உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக வளா்ந்துள்ளது. ஒரு வாக்காளா் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான் தோ்தல் ஆணையத்தின் இலக்கு.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் என 4 காலாண்டு அளவில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயதை நிறைவு செய்பவா்கள் ஏப்ரலில் வெளிவரும் பட்டியலில் சோ்ந்து கொள்ள முடியும்.

 அதேபோல, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களில்- இடைப்பட்ட காலத்தில் 18 வயதை நிறைவு செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளா் பட்டியலில் பெயா் இணைக்கப்படும்.

17 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து கொள்ள முடியும். அவா்களின் 18-ஆவது பிறந்த நாள் பரிசாக வாக்காளா் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். 

17 வயது நிறைவடைந்தவா்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளா் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

 

Tags :

Share via