வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6.25 இலட்சம் மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்.

by Editor / 02-09-2022 09:23:58pm
 வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6.25 இலட்சம் மோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்.

நெல்லை மாவட்டம், மானூர், எட்டாங்குளத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் முகநூல் பக்கத்தில் விமான சேவை நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக வந்த போலி விளம்பரத்தை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட நபரிடம் வேலை வாங்கி தருவதற்காக ரூபாய் 6 இலட்சத்து 25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட  வேலை வாங்கித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் இசக்கிபாண்டி அந்நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது அந்நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. மேற்படி இசக்கிபாண்டி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நபரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணனிடம்  மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜு க்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான காவல்துறையினர் எதிரியை தேடி வந்த நிலையில், உத்திரப்பிரதேசம், நொய்டாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சேர்ந்து உத்திரபிரதேசம், நொயிடாவிற்கு சென்று பீகார் மாநிலம், சமஷ்டிபூர், காபூர் பகுதியைச் சேர்ந்த சோட்டுகுமார் என்பவரை கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.மேலும் இதுபோன்று இணையவழி குற்றம் செய்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

 

Tags :

Share via