இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

by Staff / 16-09-2022 02:15:22pm
இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (SCO) இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சிக்கல்கள், வர்த்தகம், முதலீடு, எரிபொருள் சப்ளை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் வேகமாக வளர்ந்து வருவதில் எங்களுடைய (இந்தியாவின்) பங்கும் ஒன்று என்பதில், தான் மகிழ்ச்சியடைவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இன்று நம் நாட்டில் 70,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் உள்ளன என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது என்றார்.

கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடியின் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புவதாக தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையத்தை குஜராத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியதாக குறிப்பிட்ட பிரதமர், பாரம்பரிய சிகிச்சைக்கான உலக சுகாதார அமைப்பின் முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம் இதுவாகும் என தெரிவித்தார்.

 

 

Tags :

Share via