தலையில் கல்லைப்போட்டு கொலை - 3 பேர் கைது

by Staff / 12-10-2022 03:33:20pm
தலையில் கல்லைப்போட்டு கொலை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 8-ந்தேதி காலை இவர், தனது நண்பர்களுடன் செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது அண்ணன் ராஜ்குமார், மாயமான தனது தம்பி ரத்தினகுமாரை பல்வேறு இடங்களில் தேடினார். இருப்பினும், ரத்தினகுமார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அய்யங்கோட்டையை சேர்ந்த ரத்தினகுமாரின் நண்பர்களான விக்கி என்ற விக்னேஷ் (23), மைதிலிநாதன் (19), மதுரையை சேர்ந்த அபிகுமார் (20) உள்ளிட்ட 6 பேருடன் ரத்தினகுமார் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து விக்னேஷ், மைதிலிநாதன், அபிகுமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ரத்தினகுமாரை அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வைத்து ரத்தினகுமாரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாகவும், அதன்பிறகு புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் உடலை வீசி விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் 3 பேரும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விக்னேஷ், மைதிலிநாதன், அபிகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை, புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில், தீயணைப்பு படையினர் உதவியுடன் ரத்தினகுமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடந்த தேடுதல் வேட்டையில் ரத்தினகுமார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. 2-வது நாளாக நேற்று கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் மற்றும் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு படைவீரர்கள் தேடினர்.

அப்போது ரத்தினகுமாரின் உடல், புல்லாவெளி நீர்வீழ்ச்சியின் 3-வது அருவி பகுதியான 800 அடி பள்ளத்தில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய உடலை, தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதத்தில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via