காங்கிரஸை வழிநடத்த போகும் கார்கே

by Staff / 19-10-2022 03:01:05pm
காங்கிரஸை வழிநடத்த போகும் கார்கே

நேரு குடும்பத்திற்கு வெளியே இருந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். பதிவான 9497 வாக்குகளில் 7897 வாக்குகள் கார்கே பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசி தரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்றார். 416 வாக்குகள் செல்லாதவை. காங்கிரஸ் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

நேரு குடும்பத்துக்கு வெளியில் இருந்து ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்வானார் என்று கூறப்பட்டாலும், அவருக்குப் பதிலாக அதே குடும்பத்தைச் சேர்ந்த நம்பிக்கைக்குரியவர் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க கெலாட் தயாராக இல்லாதபோது, ​​அதற்கு பதிலாக கார்கே களம் இறங்கினார்.

மூத்த தலைவர்களின் ஆதரவுடன் போட்டியிட்ட கார்கே வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தரூர் அணியினர் குற்றம் சாட்டினர். உத்தரபிரதேசத்தில் தேர்தல் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக தரூர் புகார் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவின் மூத்த தலைவர் ஆவார். ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பெரும் சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இனி முழு நேர தலைவாக கார்கே பணியாற்றி வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Tags :

Share via