அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா  மோசடி   உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

by Editor / 19-06-2021 05:28:27pm
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா  மோசடி   உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

.



சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, தி.நகர் சத்திய நாராயணன் மீது வழக்குப் பதியக் கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டு இயங்கிய தி.நகர் சத்யா (எ) சத்தியநாராயணன், தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவழித்ததில் முறைகேடு செய்துள்ளதாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்‌ஷன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
அவரது புகார் மனுவில், 'தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்திய நாராயணன், மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததில் முறைகேடு செய்ததாகவும், 2018-19ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் 30 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு எழுதியது குறித்தும், 2017-18ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா, மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ஜூன் 27ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

 

Tags :

Share via