கோயிலில் திருடிய இருவர் கைது

by Staff / 16-11-2022 02:38:43pm
கோயிலில் திருடிய இருவர் கைது

ஈரோடு ஜெயின் கோவிலில் 8 பவுன் நகை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு ஈரோடு ஜெயின் கோவிலில் 8 பவுன் நகை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 8 பவுன் நகை திருட்டு ஈரோடு இந்திரா நகர் மோசிக்கீரனார் வீதியில் ஜெயின் சமூகத்தினர் வழிபடும் ஜெயின் மந்தீர் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு பூஜை முடித்து சுப்தேவ் என்பவர் கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் அதிகாலை சுப்தேவ் கோவிலின் கருவறையை திறக்க முற்பட்டபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மூலவர் மகாவீர் சிலையின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலை மர்மநபர்கள் திருடிச்சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை மற்றும் உண்டியலை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் டவுன் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு கிருஷ்ணசெட்டி தெருவை சேர்ந்த குமரேசன் (வயது 27) என்பதும், ஜெயின் கோவில் திருட்டு சம்பவத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது இவருடைய உருவம் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கடலூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான் நகை மீட்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via