மருத்துவமனைகளில் பலகோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகள்

by Staff / 24-11-2022 12:52:57pm
 மருத்துவமனைகளில் பலகோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகள்

அதிமுக ஆட்சியில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத ரூ.700 கோடி மதிப்பிலான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டதாக தமிழக பொதுக் கணக்கு குழு தலைவர் தெவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, அரசு மருத்துவமனைகளில் பலகோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கி குவித்து வைத்துள்ளது மருத்துவமனைகளில் பொதுக் கணக்கு குழுவினர் செய்த ஆய்வு மூலம் வௌிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தபோது ரூ.26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டதும், இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி மதுரை மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ரூ.16 கோடியில் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, அதனால் மருந்துகள் காலாவதியானதும் தெரியவந்தது.

தஞ்சாவூர், பாபநாசம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி, கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கும் மருந்துகள் பொதுமக்களை உரிய முறையில் சென்றடைவதில்லை. மேலும், சில அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் நிலவி வரும் வேளையில், இதுபோன்று காலாவதியான மருந்துகள் பேராபத்தை விளைவிக்கின்றன.

காலாவதியான மருந்துகளை மக்களுக்கு வழங்கும் அவலமும் சில இடங்களில் நிகழ்ந்துள்ளது. எனவே, நீங்கள் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை சரிபார்த்துக்கொள்ளவும்

 

Tags :

Share via