பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்

by Staff / 16-12-2022 12:18:23pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே இமாசலப் பிரதேச புதிய அரசு தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய முறையைக் கோரிப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிட அரசுகளும் ஆட்சி, அதிகார பலம் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கியும், பணியிடைநீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, நீர்த்துப்போகச் செய்துவருவது பெருங்கொடுமையாகும்.ஆகவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via