நியாபகம் வருதே,... நியாபகம் வருதே...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..

by Editor / 17-12-2022 08:14:05pm
 நியாபகம் வருதே,... நியாபகம் வருதே...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

 இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில், தமிழகம் முதலிடம் என்ற ’இந்தியா டு டே’வின் ஆய்வு தெரிவித்ததை தொடர்ந்து, முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் மற்றும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் ஆசிரியர் ஜெயராமனிடம் இருந்து தமிழ் பாடத்தை கற்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். இன்று முதல்வராக இந்த பள்ளிக்கு வரவில்லை. முன்னாள் மாணவனாக வந்துள்ளேன். என்னுடைய அப்பா போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, நான் பள்ளிக்கு 29சி பேருந்தில் வருவேன். சில நேரம் சைக்கிளிலும் வந்திருக்கிறேன். நடந்து வந்த காலங்களும் உண்டு. அதற்கு பல காரணங்களும் உண்டு. ஆனால் அதை நான் இப்பொழுது கூற முடியாது. 

எனது அண்ணன்கள் முத்து, அழகிரி என அனைவரும் இந்த பள்ளியில் படித்தவர்கள் தான். இன்றும் கூட பஸ்ஸிலோ, சைக்கிளிலோ வந்திருப்பேன். தற்போதும் பேருந்தில் தான் வரவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள் .இவர்களை பார்க்கும் போது நியாபகம் வருதே, நியாபகம் வருதே பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அரசியலுக்கு வந்து முதலமைச்சராவேன் என்று நானும் நினைத்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள். நான் மனப்பூர்வமாக சொல்வேன். நான் முதலமைச்சரானதற்கு நிச்சயம் இந்த பள்ளியும் ஒரு காரணம். இந்த பள்ளியில் பல மருத்துவர்கள், பொறியாளர்கள் இருந்தபோதிலும், ஒரு முதல்வரை உருவாக்கிய பள்ளியில் படித்தது எனக்கு பெருமைதான். இந்த பள்ளியில் படித்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

சர்ச் பார்க் பள்ளியில் என்னை சேர்க்க முயன்ற போது என் பெயரை மாற்ற சொன்னார்கள். பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேன். பெயரை மாற்ற மாட்டேன் என்றார் என் தந்தை. இந்த பள்ளியின் அட்மிஷனின்போது, நுழைவுத் தேர்வில் நான் தேர்ச்சி பெறவில்லை. அப்போது மேயராக இருந்த குசேலர்தான் சிபாரிசு செய்து பள்ளியில் சேர்க்க உதவினார். பின்னர் பள்ளியில் படித்து இவ்வளவு பெரிய சூழ்நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு பள்ளியிலும், அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு நலத்திட்டங்களை செய்ய முன்வர வேண்டும். 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் இணைந்து நலத்திட்டங்களை செய்வதற்கான முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள இருக்கிறது” என்றார்.

 நியாபகம் வருதே,... நியாபகம் வருதே...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..
 

Tags :

Share via