9 மாவட்டங்களுக்கு கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

by Editor / 25-12-2022 06:39:55am
9 மாவட்டங்களுக்கு கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று 25ஆம் தேதி இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று 25ஆம் தேதி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே போல், 26ஆம் தேதி திங்கள்கிழமை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடைக்கிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via