போக்சோ வழக்கில் கைதான வாலிபர் கொடூர கொலை

by Staff / 06-01-2023 01:24:48pm
போக்சோ வழக்கில் கைதான வாலிபர் கொடூர கொலை

திருப்பூர் திருப்பூரில் போக்சோ வழக்கில் கைதான வாலிபர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - கை, கால் கட்டப்பட்டு கொலை திருப்பூர் காலேஜ் ரோடு கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று பயங்கர துர்நாற்றம் வீசியது. இதை அப்பகுதியில் உள்ளவர்கள் கவனித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்துக்குள் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் கொலை செய்யப்பட்டு ஒரு நாளுக்கு மேல் ஆகியிருக்கும் என்று போலீசார் சந்தேகித்தார்கள். உடனடியாக அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வாலிபர் கொலையான இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனால் நண்பர்களுடன் வந்த இடத்தில் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர். மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டது. தடயவியல் துறையினர் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மாநகரில் சமீபத்தில் வாலிபர் யாரும் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் நல்லூர் போலீஸ் நிலையத்தில் வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. மகனை காணவில்லை மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் காங்கயம் குட்டப்பாளையம் மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித்குமார் (23) என்பது தெரியவந்தது. இவர் திருப்பூர் ராக்கியாபாளையம் பொன்நகரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 4-ந் தேதி மாலை அஜித்குமாரின் தாயார் லட்சுமி நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில் தனது மகன் கடந்த 3-ந் தேதி இரவு 7¾ மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். போலீசார் வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தான் அவர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. 3-ந் தேதி வீட்டைவிட்டு சென்றவர் அன்று இரவே கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அதனால் உடல் அழுகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். போக்சோ வழக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு, அஜித்குமார் மீது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு காங்கயம் மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் காங்கயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்தநிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அஜித்குமார் தனது நண்பர்களுடன் வந்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டரா? இல்லை வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via