தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் ரூபாய் 510.35 கோடி வருமானம்: மேலாளர் பத்மநாபன் அனந்த்

by Editor / 26-01-2022 12:56:11pm
தென்னக ரயில்வே  மதுரை கோட்டத்தில்  ரூபாய் 510.35 கோடி வருமானம்: மேலாளர் பத்மநாபன் அனந்த்


தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்த நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை மதுரை கோட்டம் ரூபாய் 510.35 கோடி மொத்த வருமானமாக ஈட்டியுள்ளது.  ‌ இது கடந்த ஆண்டை காட்டிலும் 97 சதவீதம் அதிகமாகும். பயணிகள் ரயில்கள் மூலம் ரூபாய் 280.80 கோடியும், சரக்கு ரயில்கள் மூலமாக ரூபாய் 191.44 கோடியும், இதர வருமானமாக ரூபாய் 38.11 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை 1.7558 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றில்  அதிகபட்சமாக 63 சதவீத அளவில் சுமார் 0.5273 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது. 848 டிராக்டர்கள் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மணிக்கு 44.2 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் தற்பொழுது சராசரியாக மணிக்கு 49.62 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சரக்கு ரயில்கள்  மணிக்கு 51.5 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன. கோட்ட வர்த்தக வளர்ச்சி குழுவின் முயற்சியின் காரணமாக புண்ணாக்கு, சோயாபீன்ஸ், ஜிப்சம், சுண்ணாம்புக்கல், சூரியகாந்தி எண்ணெய், எம் சாண்ட், கோழி முட்டை போன்ற புதிய சரக்குகள் சரக்கு போக்குவரத்தில் கையாளப்பட்டு வருகிறது. ஜிப்சம், சுண்ணாம்புக்கல் போன்ற சரக்குகளை சரக்கு ரயில் மூலம் அனுப்ப முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் முதல்முறையாக சமையல் எண்ணெய் போக்குவரத்திற்காக பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ரயில் நிலையத்தில் திரவ சரக்கு கையாளும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. அரசு, தனியார் பங்கேற்பின் மூலம் பழனி ரயில்வே சரக்கு நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது. ரயில் கட்டணமில்லா வருமானத்தை பெருக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மதுரை, திருநெல்வேலி ரயில்  நிலையங்களில் நடைமேடை எண் மற்றும் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை பதிவு செய்யும்போது பயணக் கட்டணம், ரயில் பெயர், பயண தேதி போன்ற விவரங்களை ரயில் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு தகவல் பலகைகள் 27 ரயில் நிலைய பயணச்சீட்டு மையங்களில் நிறுவப்பட உள்ளன. பல்வேறு ரயில்களில் ரயில் பெட்டியில் உள்ள முக கண்ணாடிகளில் விளம்பரம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியோர் ஆகியோரை ரயில் நிலைய வெளிவளாகப் பகுதியில் இருந்து நடைமேடைக்கு அழைத்து செல்லவும், ரயிலிலிருந்து ரயில் நிலைய முகப்பு பகுதிக்கு அழைத்து வரவும் கட்ணமில்லா மின்கல ஊர்தி சேவை மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் வசதிகளை மேம்படுத்த 27 ரயில் நிலையங்களில் ரூபாய் 40 கோடி செலவில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பழனி, கோமங்கலம், மேல கொன்ன குளம், கல்லல், கடையநல்லூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்து விட்டன. மற்ற 19 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 34 ரயில் நிலையங்களில் ரூபாய் 22 கோடி செலவில் பயணிகள் வசதிக்காக நடைமேடைகளின் உயரம் உயர்த்தப்படுகிறது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தனது சமூக கடமை நிதியிலிருந்து 55  ரயில் நிலையங்களில் தயார் நிலையில் உள்ள கழிப்பறைகளை நிறுவி வருகிறது. இதுவரை 29  ரயில் நிலையங்களில் கழிப்பறை நிறுவும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் 26 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாத இறுதியில் மானாமதுரை - ராமநாதபுரம் ரயில்வே பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் ஏற்பாடுகளை  பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய இருக்கிறார். திருச்சி - காரைக்குடி, பழனி - பொள்ளாச்சி, கொல்லம் - புனலூர், மானாமதுரை - விருதுநகர் ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல் - பழனி, செங்கோட்டை - புனலூர், செங்கோட்டை - திருநெல்வேலி - திருச்செந்தூர், மற்றும் விருதுநகர் - தென்காசி ஆகிய ரயில் பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் 2022 - 23 ஆம் நிதியாண்டில் நிறைவடைய இருக்கின்றன. இதே காலத்தில் மதுரை - திருமங்கலம்,  துலுக்கபட்டி - கோவில்பட்டி ரயில் பிரிவுகளில் நடைபெற்றுவரும் இரட்டை ரயில் பாதை பணிகளும் நிறைவுபெறும். ரயில் நிலைய பயன்பாட்டிற்காக கடந்த டிசம்பர் வரை 0.82 மில்லியன் யூனிட்டுகள் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு ரூபாய் 38.56 லட்சம் மின்சார செலவு சேமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 697 மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியீடு தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ரயிலின் இயக்கம் மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்டதன்  மூலம்  மாதத்திற்கு ரூபாய் 30 லட்சம் எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அதிக அளவாக 3812 மெட்ரிக் டன் கழிவு பொருட்கள் ஏல விற்பனை மூலம் ரூபாய் 14.56 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உரிய நேரத்தில் 894 ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே  மதுரை கோட்டத்தில்  ரூபாய் 510.35 கோடி வருமானம்: மேலாளர் பத்மநாபன் அனந்த்
 

Tags : 510.35 crore revenue in Southern Railway Madurai division: Manager Padmanabhan Anand

Share via