வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனம்

by Editor / 05-02-2023 08:59:00am
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெறும் ஜோதி தரிசனப் பெருவிழாவில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெள்ளை நிறம், கலப்புத் திரை உள்ளிட்ட ஏழு திரைகள் விலக்கி இந்த ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை காலை 5:30 மணி என ஆறு முறை ஜோதி தரிசனம் என்பது காண்பிக்கப்பட உள்ளது.இந்த தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் ஹோம் கார்ட்ஸ் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் போக்குவரத்து துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் இந்த வருடம் விழுப்புரத்திலிருந்து,விருத்தாச்சலம், நெய்வேலி, வடலூர் வழியாக கடலூர் வரை கடலூரில் இருந்து வடலூர்
வழியாக விருத்தாசலம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
 

 

Tags :

Share via