சந்தேகத்தால் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்

by Staff / 21-02-2023 02:13:14pm
 சந்தேகத்தால் மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்

நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கழுத்து அறுத்து கொன்றேன்- கணவன் பரபரப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி கோப்பாடியில் வசித்து வந்தவர் இன்பவள்ளி (வயது 38). இவர் சத்துணவு கூடத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழ்ச்செல்வன் கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசிக்கிறார். இளைய மகள் இலக்கியா தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு முடித்து விட்டு கம்பி பிட்டர் வேலை செய்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்ச்செல்வன் கிராமத்திற்கு வந்தார். அது முதல் இங்கேயே தங்கியுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. குறிப்பாக இன்பவள்ளியின் நடத்தையில் தமிழ்ச்செல்வனுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நர்சிங் கல்லூரிக்கு சென்ற இலக்கியா, கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவரது தாயார் இன்பவள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட இன்பவள்ளியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: - நான் கேரளாவில் பணி செய்து வந்தேன். பொங்கலை முன்னிட்டு வீட்டிற்கு வந்தேன். அதிலிருந்து எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. எனது மனைவி இன்பவள்ளியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூறினேன். வேலை இருக்கிறது என்று வெளியில் சென்று விடுவார். இதையடுத்து நானே சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் எனது மனைவி, மாலையில் வீட்டிற்கு வருவார். உடனே வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு வெளியே சென்று விடுவார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வருவார். நான் ஏதாவது கேட்டால் என்னிடம் சண்டையிடுவாள்.

சத்துணவு கூடத்தை பொருத்தவரையில் மாணவர்களுக்கு சமையல் செய்து முடித்து விட்டு மதியமே வீட்டிற்கு வந்து விடலாம். ஆனால், இன்பவள்ளி வீட்டிற்கு வருவதே இல்லை. இது சம்பந்தமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கிக் கொண்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் இருந்த இன்பவள்ளி, என்னை பார்த்தவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவரை தடுத்த நான் எங்கு செல்கிறாய் என்று கேட்டேன். வேலை இருக்கிறது. வெளியே செல்கிறேன் என்று கூறினார். வெளியே சென்றால் கத்தியால் வெட்டி விடுவேன் என்று நான் மிரட்டினேன். அதனை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல இன்பவள்ளி முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு தமிழ்ச்செல்வன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via