அதிமுக யாருக்கு! உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!! தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!!!

by Editor / 23-02-2023 08:30:57am
 அதிமுக யாருக்கு!    உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!!    தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணிகளாக பிரிந்த நிலையில், அதிமுக யாருக்கு சொந்தம் என்பதை இந்த தீர்ப்பு தீர்மானிக்க உள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போய் உள்ளது. நிர்வாக ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்தவே இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு ஒப்புதலுக்கு பிறகு தான் கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுகவின் உட்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு தான் அதிமுக பொதுக்குழு ஆகும். எனவே அதற்கு தான் அனைத்து அதிகாரங்கள் உண்டு. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் தரப்பு, ‘‘அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே எடப்பாடி பழனிசாமி தரப்பு தான். இருப்பினும் அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சரியாக சென்று கொண்டு இருந்த போது, தற்போது அவர்களே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளும் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளும் காலியாகும் போது, அடுத்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே இருந்தவர்களால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளால் தான் தொடர்ந்து கட்சி நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் சட்ட விதிமுறை ஆகும்’’ என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்தி வைத்திருந்தது. இந்தநிலையில், மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியாக பிரிந்து அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது. இதில், யாருக்கு அதிமுக சொந்தம் என்பதையும், இன்றைய தீர்ப்பு தீர்மானிக்க உள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : அதிமுக யாருக்கு! உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!!

Share via