காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

by Staff / 05-04-2023 12:09:30pm
காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கே. எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: - டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் பா. ஜ. க. அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இது கூட்டாட்சி அரசு முறை. மத்திய அரசுக்கு இணையான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. மாநில அரசின் ஒப்புதலை பெறாமல் திட்டத்தை செயல்படுத்த முடியாது. ஏற்கனவே, நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் இருக்கிறது.இதில், பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு போதுமான நஷ்டஈடு தந்து, உரிய வேலைவாய்ப்பை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்த முடியும். இல்லையென்றால் இதுபோன்ற திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த முடியாது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறது.கலாசேத்ராவில் நடந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் என்ன என்று அரசு கண்டுபிடிக்க வேண்டும். வதந்திகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்த ஒரு விளக்கத்தை தமிழக அரசு மக்களுக்கு வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் இளைஞர் காங்கிரஸ் மீது பா. ஜ. க. வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். மாவட்ட பா. ஜ. க. தலைவர் கல்வீசி தாக்கியுள்ளார். நிர்வாகிகள் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து வரும் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டமும், 20 முதல் 25-ந் தேதி வரை மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும், இம்மாத இறுதியில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via