நெட்பிளிக்ஸ்சில்  ஒளிபரப்பாகும் ‘நவரசா’ ஆந்தாலஜி

by Editor / 24-07-2021 04:30:25pm
நெட்பிளிக்ஸ்சில்  ஒளிபரப்பாகும் ‘நவரசா’ ஆந்தாலஜி

 


தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.


மனித உணர்வுகள் - கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது கதைகள் ஆந்தாலஜி திரைப்படமாக 190 நாடுகளில் வெளியாகிறது.


தமிழின் முன்னணி நட்சத்திரங்கள், கொரோனா கொடிய நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் பணிபுரிந்துள்ளார்கள்.
அரவிந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர்.


திரைத்துறை முழுதிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவுகள் ‘பூமிகா டிரஸ்ட் மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. உணர்ச்சிபூர்வமான இந்த திரைப்பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பெருமை மிகு படைப்பாளி பரத்பாலாவின் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களை வித்தியாசமான பார்வையில், ஒன்பது கதைகளாக சொல்லும், இப்படத்தின் டீஸர்,  ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது என்று மணிரத்னம் கூறினார்.


தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்துக்கு முன்னணி கலைஞர்கள் அனைவரும் நலிந்த கலைஞர்களின் வாழ்க்கைக்காக, சம்பளம் இல்லாமல் பணிபுரிந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via