கோபமாக இருக்கும் பொழுது சமைக்காதீர்கள்!

by Admin / 21-07-2021 12:48:17am
கோபமாக இருக்கும் பொழுது சமைக்காதீர்கள்!

சமையல் அற்புதமான விசயம்.சிலர் சமைப்பதில் மிகுந்த ஆசையாக – ஆர்வமாக இருப்பர்… சிலர் சமைக்கத் தெரியாமல் சாப்பிடுவதில்… விதவிதமான உணவுகளை ருசித்து ரசித்து சாப்பிடுவதில் பேரார்வமுடையவர்களாக இருப்பர். சிலர் சமையல் கூடத்தைத் தன்னைத் தவிர வேறு எவரும் சென்று சமைக்க அனுமதிக்காத புனித இடம் வைத்திருப்பர்.

பலர் தனக்குப் பிடித்த இடமே சமையலறைதான் என்று பெருமைபடக் கூறுவர்… அதற்குக் காரணம், சமையல் அறை என்பது மற்ற அறைகளைப் போல இல்லாமல் அனைவருக்குமான உணவை உற்பத்திச் செய்யும் – அன்பை, பாசத்தை, உறவை பாசத்தின் வழி வெளியிட சிறந்ததாகக் கருதக்கூடிய அறையாக நினைப்பர். ஏனெனில் உணவு என்பது அரிசி, மாவு, காய்கறி – மசாலாச் சாமான்கள், எண்ணெய், உப்பு, மிளகாய்தூளோடும்… ஸ்டவோடும் முடிந்து விடும் காரியமன்று…


சமையலறையில் தான் அன்பு – பாசம் உணவாகச் சமைக்கப்படுகின்றன… என்கணவருக்குச் சளித்தொல்லை.. இன்று மிளகு ரசம், என் பையனுக்கு கேரட் பொரியல் பிடிக்கும்… என் பொண்ணு மாத விலக்குநாள்…. மாமனாருக்கு தலைசுற்றல் எண்ணெய் அதிகம் சேர்க்கக் கூடாது…. மாமியார் சர்க்கரை நோய்… அளவோடு இனிப்பை பரிமாற வேண்டும் என்றெல்லாம்பட்டியலிட்டு ஒவ்வொருவரின் தேவையை… உடலை… ஆரோக்கியமாக வைக்க… மனத்தைத் தெளிவு படுத்த… உயிரை வளர்க்கத் துணை நிற்கும் இடமே சமையல் அறை… இது உறவுகளை வளர்க்கும் இடம்… உணர்வுகளைப் பேணும் இடம்.


பசித்த வயிற்றுக்கு ருசிக்கச் சமைக்கும் கூடமாக இது இருந்தாலும் இது உறவுகளை மேம்படுத்த உதவும் இடமாகவும் கொள்ள வேண்டும். சமைக்கின்றவர்கள் ஒரே சிந்தனையில் இருந்து சமைப்பது நல்லது… கணவன் மனைவிக்குள் சண்மை வந்தால், தாய் மகனுக்கு, மகளுக்கிடையில் இல்லை உறவுகளுக்கிடையில் பகை ஏற்பட்டாலும் சமையல் அறைக்குச் சென்று சமைக்கும் பெண்கள் கோதாபங்களோடும் – வெறுப்புணர்வோடும், யாரையும் திட்டிக் கொண்டோ… இல்லை அழுது கொண்டே சமைக்காதீர்கள்… அது ஆபத்தானது…

நீங்கள் யார் நன்றாக இருக்க வேண்டுமென்று உணவு சமைக்கிறீர்களோ… அவர்களைத் திட்டிக் கொண்டே சமைத்து… அந்த உணவை அவர்கள் சாப்பிட்டால், அவர்கள் உடல்மட்டுமல்ல, மனதும் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். நல்ல மனதோடு… நிச்சலனமான எண்ணத்தோடு சமையலறையில் நீங்கள் சமைக்கும் உணவு தேவாமிர்தமாக மாறும்….


உணவில் பாசம் கலந்த – அன்பு கலந்த உணர்வுகள் மட்டும் இறங்காது… திட்டிக் கொண்டே சமைக்கும் சொற்களில் ஆகர்ஷணமும் உணவையும் பீடிக்கும், உண்பவர்களையும் பீடிக்கும். சொற்கள் சாதாரணமானவை அல்ல… அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மொழியில் உயிரோட்டமாக… ஏன் மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. கெட்ட வார்த்தையும் நல்ல வார்த்தையும் அப்படித்தான்.. சொற்கள் மந்திர சக்தி மிக்கவை.


நம் புராணம் சொல்லுமே அஸ்வினி குமாரர்கள் வானவெளியில்நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது.. பூமியில் வாழுகிறவர்கள்… என்ன பேசுகிறார்களோ… சொல்கிறார்களோ… அவை அப்படியே நடக்கட்டும் ததாஸ்வே என்று வரமளிப்பார்.. அதனால், நம் மனம்… மிகப்பெரிய ஆற்றலுடையது.. அதிலிருந்து உதயமாகும் எண்ணங்கள் உன்னதமானவை… நாபிக்கமலத்திலிருந்து உதிக்கும் சொற்களும் அப்படியே…


ஆகவே, சமையல் கூடத்திலிருக்கும் தாய்மார்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள், கணவர் இன்ன பிறர் மீது கோபமாக இருக்கும் பொழுது… சமையல் கூடத்திற்குச் சென்று சமைப்பதைத் தவிருங்கள்… கோபம் – சண்டை – நிரந்தரமன்று.. ஆனால், சொற்கள், மனவெளிஎண்ணங்கள் ஆற்றலுடையவை. தெரிந்தோ தெரியாமலோ அக்னி முன்பாக நீங்கள் நின்று சொன்ன, புலம்பிய சொற்கள் அவர்களைப் பாதிக்கலாம்… ஏன்? அவர்கள் உங்கள் வழி சாபம் கூடப் பெறக்கூடும்… ஆகவே சமையலறை இனிய கூடமாக.. வசந்த காற்றுடன் மசாலா நறுமணம் வீசும் அறையாக புனிதம் பெறவேண்டும்…

 

Tags :

Share via