பொதுமக்கள் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது: அரசுதலைமை செயலாளர் சிவ் தாஸ்மீனா

by Staff / 13-09-2023 02:36:01pm
பொதுமக்கள் தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது: அரசுதலைமை செயலாளர் சிவ் தாஸ்மீனா

தமிழக அரசின்  தலைமை செயலாளர் சிவ் தாஸ்மீனா தலைமையில் டெங்கு மற்றும்தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறையை சார்ந்த செயலாளர்கள், துறை சார்ந்த இயக்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் மொத்தம் 2, 972அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தினசரி, காய்ச்சல் கண்டவர்கள் அறிக்கை பெறப்பட்டு, கிராம, நகர வாரியாக பட்டியல் தயார் செய்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அன்றே அனுப்பப்பட்டு வருகிறது.காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொது மக்கள் மருத்துவமனையை அணுகுமாறும், தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடைகளில் பொது மக்களுக்கு (உரிய) மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் தேங்காத வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via