இரு அவைகளிலும் அமளி; ஒத்திவைப்பு காங்கிரஸ் மீது மோடி கடும்  தாக்கு

by Editor / 27-07-2021 04:46:58pm
இரு அவைகளிலும் அமளி; ஒத்திவைப்பு காங்கிரஸ் மீது மோடி கடும்  தாக்கு


பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்ட விவகாரத்தை கண்டித்து பார்லிமெண்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின.


இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நினைவிருக்கலாம்.


இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஒட்டுக் கேட்பு புகார்களை மத்திய அரசும், பாரதீய ஜனதா கட்சியும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லை என அவை கூறுகின்றன. ஆனாலும் பார்லிமெண்ட்டில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி பார்லிமெண்ட் கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற எம்.பி.க்கள்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பிரதமர் மோடி பார்லிமெண்டில் பேசுகையில், முட்டுக்கட்டை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி பார்லிமெண்ட் விவாதத்தில் ஆர்வம் காட்டவில்லை. பார்லிமெண்ட் செயல்பட அனுமதிக்கவில்லை. தடுப்பூசி பிரச்சினை குறித்து கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என காட்டமாகக் கூறினார்.
மேலும் அனைத்து பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களையும் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு தங்கள் பகுதிக்குச் சென்று மக்களிடம் உண்மையைச் சொல்லுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு வேதனைக்குரியது; துரதிர்ஷ்டவசமானது என்றார். ஜூலை 18ந் தேதி முதல் அவையில் எந்த ஒரு நடவடிக்கையும் நடைபெறவில்லை.ஒட்டுக் கேட்பு விவகாரத்தை சபையில் விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.பி. எலராம் கரீம், காங்கிரஸ் எம்.பி. சக்தி சிங் கோகில் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் 11.00 மணிக்கு சபை 1 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) ராஜ்ய சபை 5 தடவை ஒத்தி வைக்கப்பட்டது.


பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான பர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பை கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.


கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாசஸ் விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்களவையில் அமளிக்கு இடையே இரு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது முதலே அமளி ஏற்பட்டது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். 


 

 

Tags :

Share via