கர்நாடக முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம் 

by Editor / 04-08-2021 04:22:23pm
கர்நாடக முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம் 

 


மேகதாது அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மாட்டோம் என கர்நா டக  முதலமைச்சர் கூறுவது ஏற்பு உடையது அல்ல என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:


கேள்வி: சட்டமன்ற பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்திறப்பு விழாவில் எதிர்கட்சியான அண்ணா தி.மு.க பங்கேற்கவில்லை. முறையான அழைப்பு அனுப்பப்பட்டதா?


பதில்: விழாவில் கலந்து கொள்வதும் அல்லது கலந்து கொள்ளாததும் அவர்களுடைய விருப்பம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரை மேடையில் அமர வைக்கவேண்டும். அவர்களுடைய ஒத்துழைப்போடு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என முதலமைச்சர் நினைத்தார். விழா நடத்த திட்டமிட்ட பொழுது முதலமைச்சர் என்னை அழைத்து எதிர்க்கட்சித் தலைவரை தொடர்புக் கொண்டு விழாவிற்கு வருகை தர வேண்டும் எனவும், ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் அமரும் வரிசையிலேயே தங்களுக்கும் இடம் ஒதுக்கப்படும் எனவும், தாங்கள் விழாவில் வாழ்த்துரைக்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறுமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். நானும் அவ்வாறே அவரிடம் விவரங்களைக் கூறி அழைப்பு விடுத்தேன்.


அதற்கு அவர் அனைவரிடம் கலந்து ஆலோசித்து கூறுவதாக கூறினார். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை என்னிடம் கூறாமல் சட்டப்பேரவை செயலாளரிடம் நாங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் கூறும் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் படத்திறப்பு விழாவில் தி.மு.க. பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர்.


ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது போலவே எங்களுக்கும் அழைப்பு அனுப்பினார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த எங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால், நாங்கள் உரிய மரியாதையை அவர்களுக்கு அளிப்போம்.


கேள்வி: பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை இவ்விழாவில் கலந்துக்கொண்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: பாரதீய ஜானதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டதை முழு மனதோடு வரவேற்கிறேன். அவரின் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன்.


கேள்வி: கர்நாடக முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் எனக் கூறுகிறாரே?


பதில்: உச்ச நீதிமன்றம், காவேரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை மதிக்கவேண்டும். தீர்ப்பையும் நீதிமன்றக் கருத்தையும் ஏற்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் கூறுவது ஏற்புடையது அல்ல. அவரின் தந்தை பொம்மை எங்கள் தலைவர் கருணாநிதியோடும், தமிழகத்தின் மீதும் பற்றும், நட்புறவும் கொண்டவர். அவருடைய வழியில் நட்புணர்வோடு கர்நாடக முதல்வர் செயல்படுவார் என நம்புகிறேன்.


கேள்வி: மார்க்கண்டேய நதியில் அணை கட்டியுள்ளார்களே, நடுவர் மன்றம் அமைத்திட முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா?


பதில்: அணைக் கட்டும் பொழுதே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. அணைக் கட்டுவதற்கு தடை விதிக்காமல் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பொழுது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என அழுத்தம் கொடுத்தேன். அதற்கு விரைவில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


கேள்வி: 75 வது சுதந்திர தின நினைவுத் தூண் சென்னையில் எப்பொழுது அமைக்கப்படும்?


பதில்: இதற்கான அரசாணை நிதி ஒதுக்கீடு ஆகியவை விரைவில் வழங்கப்படும். அதனை தொடர்ந்து நினைவுத் தூண் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.


கேள்வி: உங்கள் அரசின் நூறு நாள் சாதனையாக எதை நீங்கள் கூறுவீர்கள்?


பதில்: உயிர் காக்கும் பணியே அரசின் முதல் கடமை. அந்த வகையில் கடந்த மூன்று மாதமாக நமது முதலமைச்சர் 24 மணி நேரமும் செயல்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றியுள்ளார். மற்ற சாதனைகளைவிட இதையே முக்கிய சாதனையாக கருதுகிறேன். மேலும், பதவி ஏற்ற பொழுது முதலமைச்சர் முதல் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களும் முக்கியமானவை. அதையும் நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

 

Tags :

Share via