தமிழக மீனவர்கள் 15 பேர் கைது; நிரந்தரத் தீர்வு காண அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

by Staff / 15-03-2024 01:59:42pm
தமிழக மீனவர்கள் 15 பேர் கைது; நிரந்தரத் தீர்வு காண  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது X தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது; தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது: மீனவர் சிக்கலுக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் தேவை! நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்வாகவே மேலும் 15 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது என்றார்.

 

Tags :

Share via