கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 31-03-2022 03:30:19pm
கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் திமுக அலுவலகமான அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களை அழைக்க திமுக தலைமை திட்டமிட்டுஅதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.இந்த விழாவுக்கான 

 அழைப்பிதழ்களை நேரில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு வந்த சோனியா காந்தி முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இதனைத்தொடர்ந்து 

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம்  வழங்கினார். மேலும், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 14 கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் வழங்கினார். 

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்,மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது, மாநில உரிமைகள் குறித்தும்,தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.இந்த நிகழ்வின் போது தி.மு.க மக்களைவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் உடனிருந்தனர்.
 

கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
 

Tags : Tamil Nadu Chief Minister MK Stalin met Prime Minister Modi with demands

Share via