மத்தியப் பிரதேசத்தின் வெள்ளம் பாதித்த  பகுதிகளில் ராணுவம்

by Editor / 06-08-2021 05:11:24pm
மத்தியப் பிரதேசத்தின் வெள்ளம் பாதித்த  பகுதிகளில் ராணுவம்

 

மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, குவாலியர் -சம்பல் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.  இதனால் குவாலியர், சியோபூர், சிவ்புரி, தாதியா மற்றும் பிஹிந்த் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், முக்கிய சாலை இணைப்புகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.  இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மற்றும் கால்நடைகளின் உயிரை காக்கவும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணுவத்தின் உதவியை  உள்ளூர் நிர்வாகம் நாடியது. 


இந்த வேண்டுகோளையடுத்து, ‘வர்ஷா 21’ என்ற பெயரில் தனது மீட்பு நடவடிக்கைகளை ராணுவம் துரிதமாக தொடங்கியது.  இதையடுத்து குவாலியர், ஜான்சி மற்றும் சாகர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் 80 பேர்  அடங்கிய, 4 குழுவினர் மீட்பு உபகரணங்களுடன், கடந்த 3ம் தேதி வௌ்ள நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  அவர்கள் 2 மணி நேரத்தில் வெள்ளம் பாதித்த சியோபூர், சிவ்புரி, தாதியா மற்றும் குவாலியரில் உள்ள பிதார்வர் ஆகிய பகுதிகளுக்கு சென்றனர்.  இரவு நேரத்திலேயே மீட்புப் பணியை தொடங்கிய ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் மூழ்கிய கடைசி கிராமத்துக்கும் வெற்றிகரமாக சென்றடைந்தனர்.

கடந்த 4ம் தேதி காலை, அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை  மீட்டனர். அதன் பின்பு 250 பேரையும், ஏழை விவசாயிகளின் கால்நடைகளையும் காப்பாற்றினர்.   பிஹிந்த் மாவட்டத்தில் சிந்து நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் புதிய பகுதிகளை  மூழ்கடித்தது. இதனால் கூடுதல் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, 9 குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

700க்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  மேலும், ராணுவ மருத்துவர்கள் மற்றும்  மருத்துவப் பிரிவு ஊழியர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.  உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

 

Tags :

Share via